×

உலக தடகள சாம்பியன் ஷிப்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

யூஜின்: உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் 19 ஆண்டுக்கு பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம் யூஜின் நகரில் 18வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 22 பேர் கொண்ட தடகள அணி பங்கேற்றுள்ளது. ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது போல் இம்முறையும் இந்தியாவிற்கு தங்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கினார். முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். 2வது வாய்ப்பில் 82.39 மீட்டர் வீசினார். ரோகித் யாதவ் தனது முதல் வாய்ப்பில் 77.96 மீட்டர் வீசி ஏமாற்றம் அளித்தார். உலகின் நம்பர் ஒன் வீரரான கரீபியன் தீவின் கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் வாய்ப்பில் 90.21 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். 2வது வாய்ப்பில் 90.46 மீட்டரும், 3வது வாய்ப்பில் 87.21 மீட்டரும் விசினார். 6வது வாய்ப்பில் அதிகப்பட்சமாக 90.54 மீட்டர் வீசி தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா தனது 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் வீசினார். 4வது வாய்ப்பில் 88.13 மீட்டர் வீசி 2வது இடத்திற்கு முன்னேறினார். 5வது மற்றும் 6வது வாய்பை பவுல் செய்தார். இருப்பினும் 2வது இடத்தை பிடித்த நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கம் பெற்றார். செக் குடியரசின் வட்லெஜ்ச் 88.09 மீட்டர் வீசி வெண்கலம் வென்றார். 21 வயதே ஆகும் இந்தியாவின் ரோகித் யாதவ் 10வது இடம் பிடித்தார். 24 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்று கொடுத்தார். தற்போது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பெற்றுக்கொடுத்துள்ளார். இதன்மூலம் 19 ஆண்டுக்கு பின் உலக தடகளத்தில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 2003ம் ஆண்டு உலக தடகளத்தில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், இந்தியாவுக்கு வெண்கலம் வென்று தந்தார். உலக தடகள சாம்பியன் ஷிப்பில் இந்தியாவிற்கு பதக்கம் பெறும் முதல் ஆடவர் என்ற சாதனையும் அவர் படைத்தார். வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், அனுராக் தாகூர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஹரியானாவில் உள்ள சொந்த ஊரில், நீரஜ்ஜின் உறவினர்கள் ஆட்டமாடி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். டிரிபிள் ஜம்ப் இறுதி சுற்றில், இந்திய வீரர் எல்தோஷ் பால் 16.79 மீட்டர் தாண்டி 9வது இடத்தை பிடித்து ஏமாற்றமளித்தார். 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் தகுதிச் சுற்றில், இந்திய ஆடவர் அணி (முஹம்மது அனஸ், முஹம்மது அஜ்மல், நாகநாதன், ராஜேஷ்) 3:07.29 நிமிடத்தில் கடந்து கடைசி இடத்தை பிடித்ததால் போட்டியிலிருந்து வெளியேறியது. பதக்க பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளியுடன் 28வது இடத்தில் உள்ளது. இன்றுடன் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடர் நிறைவடைகிறது.* நாட்டிற்காக பதக்கம் வென்றதில் மகிழ்ச்சிவெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா கூறுகையில், ‘ஒலிம்பிக் சாம்பியன் என்பதால் என் மீது அழுத்தம் இருந்ததாக உணரவில்லை. களத்தில் எதிர் காற்று வீசியதால் நிலமை சரியாக இல்லை. 3வது முறை ஈட்டி எறிந்த பின்னர் கூட என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனாலே மீண்டு வந்து, வெள்ளி வென்றிருக்கிறேன். இதனை நல்லதென்றே உணர்கிறேன். அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாற முயற்சி செய்வேன். இப்பதக்கத்தால் திருப்தியே. என் நாட்டிற்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சி அடைக்கிறேன். தங்கம் வென்ற ஆண்டர்சன் கடுமையாக உழைத்துள்ளார். என்னுடன் போட்டி போட நல்ல போட்டியாளர் கிடைத்துள்ளார்,’’ என்றார். 19 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம்பதக்க பட்டியல் இடம்    நாடு    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்1    அமெரிக்கா    10    8    10    282    எத்தியோப்பியா    4    4    2    103    கென்யா     2    4    2    84    ஜமைக்கா    2    4    1    75    சீனா    2    1    3    628    இந்தியா    0    1    0    1…

The post உலக தடகள சாம்பியன் ஷிப்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா appeared first on Dinakaran.

Tags : World Athletic Champion Ship ,Neeraj Chopra ,Eugene ,World Athletic Champion Ship Series ,Silver ,Dinakaran ,
× RELATED ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில்...